விஷ்ணு சஹஸ்ரநாமம்



விஷ்ணு சஹஸ்ரநாமம்.

இன்று சனிக்கிழமை ஜனவரி ஆறாம் நாள் இரண்டாயிரத்து இருபத்தி நான்கு (06-Jan-2024).

எல்லோருக்கும் எனது நமஸ்காரம்.

இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பதினை பற்றி சற்று கூறப்போகிறேன்.

அதற்கு முன்னால், முதலில் எனது தாய் தந்தையரையும், எனது குருவான அகத்தியரையும் அவரது பத்தினியான லோபமுத்ர அம்மாவையும், அந்த விக்னேஸ்வரனையும், ஆதி பகவானான அந்த பரமாத்மா விஷ்ணுவையும் அவரது பத்தினியான ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியையும் வணங்கி, இதை எழுதுகிறேன். இவர்கள் எல்லோரும் எனக்கு பணிவுடைமை வழங்கட்டும்.

உங்களில் பலரை போல் எனக்கும் சமஸ்கிருதம் தெரியாது. அதனால் சமஸ்கிருதத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மொழி புரியாமல், அர்த்தம் புரியாமல் கேட்பதை விட, நான் தமிழில் அதனை அர்த்தம் புரிந்து கொண்டு கேட்பது வழக்கம். இந்த விளக்கத்தின் முடிவில், தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பதின் யூடுப் வீடியோவின் வலை தள முகவிரியினை கொடுத்துள்ளேன். தாங்கள் அதனை தினமும் கேட்டு பயன் பெறுங்கள்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது யாதெனின், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள். சமஸ்கிருதத்தில் "சஹஸ்ர" என்றால் ஆயிரம் என்பது பொருள். அதாவது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்வது "விஷ்ணு சஹஸ்ரநாமம்".

நான் முதலில் இந்த ஸ்லோகங்களை கேட்கும் பொழுது, எங்கே அந்த ஆயிரம் நாமங்கள் என்று புரியாமல் திகைத்தது உண்டு. ஏன் என்றால், நான் எதிர்பார்த்தது - மாதவா, கேசவா, மதுசூதனா, நாராயணா, ஜகன்னாதா, புருஷோத்தமா, பக்தவத்சலா - என்பது போன்ற ஆயிரம் நாமங்களை. ஆனால், இதில் வருவதோ, அந்த பரமாத்மாவினுடைய பல குணங்களை பற்றி கூறும் ஸ்லோகங்கள். உதாரணமாக, அந்த பகவானே சொல்வது போல இந்த சுலோகம் வருகிறது - ".....கரம் கொடுப்பேன் நல்லோர்க்கு, அழித்திடுவேன் தீயோரை, தர்மம் என்றென்றும் நிலை பெறவே அவதரிப்பேன் யுகம் யுகமாய்.....". மற்றைய சில - ".....கருமேக நிறமது அங்கம், கண்கள் கொண்டாய் விசாலமாய்.....". இன்னும் மற்றொன்றில் - ".....புண்யாத்மா பரமாத்மாவும் மோட்சத்தை தருவதும் நீயே.....மாயவன் எதிலும் உள்ளான், ஆக்குபவன் அழித்து காப்பவன்.....வைஜயந்தி தாங்கும் மார்பன்.....கரத்தில் சுழலும் சக்ராயுதம், சிம்ம ரூப உத்தமனே.....நல்லோர் அகம் உள்ளமர்ந்தாய், அவர்க்கெல்லாம் நன்மையே செய்தாய்.....உயிரின் உன்னத சேவை செய்வோர் துயர் நீக்குவாய்.....ஸந்யாஸத்தில் சுகம் கொண்டோன், பக்தி மோக்ஷம் அருள்கின்றவன்.....செல்வம் தருவான் ஸ்ரீநிவாசன், நிதிகளை உலகுக்கே தருவான்.....சூரசேனன் யது குலத்தோன், அடைக்கலம் தரும் யமுனை தீரன்.....தூண் துரும்பிலும் அவன் உள்ளான்.....அளவே இல்லா அழகன்.....புண்யன், துர்சொப்பன நாசன்.....ஜனன மரண நிலை அற்றவன்.....தாயுமாய் தந்தையுமானான், பிரம்மன் தந்தை அவனே....." - இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனின், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது பகவானினுடைய பல்வேறு குணங்களை பற்றி சொல்வது.

சரி - இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை இயற்றியவர் யார் என்றால், எனக்கு தெரிந்தவரை, இதனை இயற்றியவர் "வேத வியாசர்". ஏன் என்றால்,

குருக்ஷேத்திர யுத்தத்தின் முடிவு நெருங்கையில், யுதிஷ்டிரனான தர்ம புத்திரன், பீஷ்மரை (அவர் அம்பு படுக்கையில் இருக்கும் பொழுது) நோக்கி பின் வருமாறு கேட்கிறான் -

"ஏதாகும் ஒன்றான தெய்வம் எந்த தெய்வம் சிறந்தது? உடன் பலன் தருவார் யாரே, வணங்கினால் எது சுகம் தரும்? எத்தர்மம் சகல தர்மத்தை மிஞ்சும் தர்மமாகும்? மந்திரம் நான் என் சொல்வேன் ஜென்ம சம்சார பந்தம் விட (அதாவது இந்த பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற கொடுமையான விதிப்பயனை விட்டொழிப்பதற்கு எந்த மந்திரத்தை சொல்வது)?"

இந்த வினாவிற்கு, பீஷ்மர் பின் வருமாறு விஷ்ணுவின் சஹஸ்ரநாமத்தை கூறுகிறார். கூறும் முன்னே அவர், கிருஷ்ணனை பார்த்து அர்த்தத்துடன் பின் வருமாறு கூறுகிறார். அதாவது கிருஷ்ணனே பரமாத்மா என்று பொருள் படும்படி கூறுகிறார் -

"ஜகந்நாதன் தேவ தேவன் அனந்தன் புருஷோத்தமன். விஷ்ணு நாமம் ஆயிரங்கள் துதித்தால் துன்பம் இல்லை. இறைவன் அவனை தொழுதால், தியானம் என்றும் செய்வதால், வேண்டும் வரம் அவன் தருவான், துன்பங்கள் பறந்திடுமே. அனாதி அவனே விஷ்ணு அகில லோக தலைவனாம். அவனை என்றும் துதித்தாலே துன்பம் தொடராமல் ஓடிடும். ப்ரஹ்மத்தின் சர்வ தர்மத்தின் புகழெல்லாம் பெருக்கி அருள்பவன். உலகநாதன் பூதநாதன் உயிரின் உள்ளே இருப்பவன். உயர்ந்தது உத்தம தர்மம் மனிதன் பிறந்ததின் பயனாம். ஹரி நாமம் சொல்வதே யாவும் அவன் புகழை சொல்வது மேலாம். பேரொளியில் பெரியதாகும் தவத்தினிலே மிகப்பெரிது. ப்ரஹ்மாண்டம் எதுவோ அதுவே உயிர் காக்கும் ஒரே வடிவம். தூய்மையிலே மிகத்தூய்மை மங்களத்தில் உயர்ந்தது. தேவரின் தேவன் அவன் என்பார் உயிர் குலத்தின் அழிவில்லா தந்தை. உயிர் உற்பத்தி எங்கேயோ கல்ப காலம் தொடங்கையிலே. பிரளயத்தில் எங்கே எல்லாம் லயமாகி அடங்கிடுமோ. அந்த தெய்வம் ஒரே தலைவன் ஜகந்நாதன் ஆகிடுவான். விஷ்ணுவின் நாமம் ஆயிரங்கள் பவப்பிணியை போக்கிடுமே. எந்த நாமங்கள் சுபமாவோ மகாத்மாக்கள் சொன்னதுவோ. அவைகள் புருஷார்த்ததை தரும் நாமங்கள் கேட்பாய். ஹரி நாமம் ஆயிரங்கள், வேத வியாசர் அதன் முனிவர்.....வியாசர் உரைத்தார் அழகாய், சொல்வோர் பெறுவோர் சுகங்களை....."

பிதாமகர் பீஷ்மரின் இந்த பதிலில் அவர் சொல்கிறார் - "ஹரி நாமம் ஆயிரங்கள், வேத வியாசர் அதன் முனிவர்.....வியாசர் உரைத்தார் அழகாய், சொல்வோர் பெறுவோர் சுகங்களை.....". இதன் அர்த்தம் - இந்த ஆயிரம் ஹரி நாமங்களை உரைத்தவர் "வேத வியாசர்" - என்று பொருள் படும். ஆகவே, முதலில் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற ஸ்லோகங்களை உரைத்தவர் வேத வியாசர் ஆவார். அதனை பீஷ்மர், யுதிஷ்டிரனான தர்ம புத்திரனுக்கு, இதுவே தர்மத்தினில் எல்லாம் மிக உயர்ந்த தர்மம் என்று உபதேசித்தார்.

நாம் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்பதால் நமக்கு என்ன நன்மைகள் கூடும் என்பதையும் இதில் நாம் காணலாம்.

".....தினமும் கேட்போர் துதிப்போர், ஒரு துன்பம் தொடராமலே, இகத்திலும் மற்றும் மேலுலகிலும் பெரும் இன்பத்துடன் வாழ்வானே....."
".....பக்திமான் இத்துதிகளெல்லாம் தினம் ஒரு மனம் கொண்டுமே, பெயர்கள் தன் வாசுதேவன் சொன்னால் என்றும் உயர்ந்திடுவான்.....அழகு திருமகள் சேர்வாள், என்றும் எதிலும் வெற்றியே.....தைரியம் அவன் பெறுவானே, வீரம் தேஜஸை அடைவனே.....வருத்தும் நோய்கள் அகலும், பலமுள்ள தேகவான் ஆவான்.....ரோகங்கள் அவனை விட்டகலும், சிறையின் கதவுமே திறந்திடும்.....பயம் என்றுமே வாராது.....சகல பாவம் பறந்தோடும், தூய ப்ரஹ்ம நிலை தரும்.....ஜனன மரண பிணிகளாலே வரும் துன்பங்கள் இல்லையே.....தினம் தொழும் பக்தர் எல்லாம் உயர் வெற்றி உடன் பெறுவார்.....உயர் வெற்றி தரும் ஒரு வழி இது....."

இதில் ".....சிறையின் கதவும் திறந்திடுமே....." என்று வருவதை கவனித்தீர்களா? தியாகராஜ பாகவதர் சிறையில் இருக்கும் பொழுது, தன் நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் கூறினார் என்றும், அதனால், அவர் வழக்கில் வெற்றி பெற்று, சிறையினின்றும் வெளி வந்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேலும் பகவான் கூறுகிறான் - "இந்த நாமம் ஆயிரத்தை சொல்லும் அடியவர் துணை நான். பாடல் ஒன்றாலே அருள் தருவேன், அது இதுவே ஐயம் வேண்டாம். ஒரு பாடல் நலம் தருமே, அது இது ஆகும்....."

மேலும், இதில், பார்வதி தேவி தன்னுடைய பதியான பரமேஸ்வரனிடம் பின் வருமாறு தன்னுடைய வினாவினை கேட்பதாகவும், பரமேஸ்வரன் அதற்கு பின் வருமாறு பதில் கூறுவதாகவும் வருகிறது -

பார்வதி தேவி கேட்கிறாள் - "என் நாதா - பண்டிதர் தினமும் கூறும் இந்த ஆயிரம் நாமங்களை சொல்லும் உபாயம் ஒன்றை கூறுங்கள்".

இதற்கு பரமேஸ்வரன் பின் வருமாறு பதிலளிக்கிறார் -

"ஸ்ரீ ராம ராம ராம எனும் உயர் மந்திரம் அதி உத்தமம், சிறந்த நாமம் ஆயிரமும் தரும் புண்யம் இது தருமே....."

இதன் பொருள் என்னவெனில் - "ஸ்ரீ ராம ராம ராம" என்று ஸ்ரீ ராமனின் நாமத்தை மூன்று முறை சொன்னால், ஹரியின் ஆயிரம் நாமங்களை சொல்வதன் புண்யம் தரும். இந்த நவீன யுகத்தில், நமக்கு ஹரியின் இந்த ஆயிரம் நாமங்களை சொல்வதற்கோ, கேட்பதற்கோ நேரம் இல்லாத பொழுது, நாம் சிறப்பாக ஸ்ரீ ராமனின் நாமத்தை மூன்று முறை "ஸ்ரீ ராம ராம ராம" என்று சொன்னாலே போதும். அது, ஹரியின் ஆயிரம் நாமங்களை சொல்வதற்கு ஒப்பானதாகும் என்று பரமேஸ்வரன் கூறுகிறார்.

இதனை மற்றொரு முறையாகவும் சொல்லலாம். அதாவது, ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் (எழுத்திற்கும்) , சமஸ்கிருதத்தில், ஒரு தொகை உண்டு. "ரா" என்ற அக்ஷரத்திற்கு 2 என்று ஒரு தொகை உண்டு. அதே போல "ம" என்ற அக்ஷரத்திற்கு, 5 என்று ஒரு தொகை உண்டு. அதனால், நாம் "ராம" என்று சொன்னால் அதன் தொகை 2 x 5 = 10 என்று வருகிறது. இதையே "ராம ராம ராம" என்று சொன்னால் 10 x 10 x 10 = 1000 (ஆயிரம்) என்ற தொகை வருகிறது. அதனால், பரமேஸ்வரன் கூறிய "ஸ்ரீ ராம ராம ராம" என்ற மந்திரத்தை கூறினால், நாம், ஹரியின் ஆயிரம் நாமங்களை கூறுவதற்கு சமம். ஆகவே, நேரம் இல்லாதவர்கள், "ஸ்ரீ ராம ராம ராம" என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

நான் முன் சொன்னது போல, இதோ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில், யூடுப் வீடியோவில் -

விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில், யூடுப் வீடியோவில்

நாளை மறுபடியும் சந்திக்கலாம்.

ஜெய் ஸ்ரீ ராம்.



Home  Miscellenous Topics